இந்திய பகுதிக்குள் பறந்த சீனா ஹெலிகாப்டர்கள் விவகாரம் சீனாவின் விளக்கம்

இந்திய பகுதிக்குள் பறந்த சீனா ஹெலிகாப்டர்கள் விவகாரம் சீனாவின் விளக்கம்

சீன ராணுவத்தைச் சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் வானில் வட்டமடித்தது தொடர்பாக, அந்த நாடு திங்கள்கிழமை விளக்கமளித்துள்ளது.
சீன ராணுவத்துக்குச் சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் சமோலி மாவட்டம், பாராஹோத்தி பகுதியில் சனிக்கிழமை சந்தேகத்துக்கிடமான வகையில் வானில் வட்டமடித்தன. சுமார் 5 நிமிடங்களுக்குப் பின், அந்த ஹெலிகாப்டர்கள் சீனாவை நோக்கித் திரும்பின.
இதுதொடர்பாக இந்திய விமானப் படை வட்டாரங்கள் தெரிவிக்கையில், 'பாராஹோத்தி பகுதியிலுள்ள இந்திய ராணுவத் துருப்புகளை உளவு பார்க்கும் நோக்கத்தில், அந்த ஹெலிகாப்டர்கள் வந்திருக்கலாம். மேலும், வானிலிருந்தவாறு புகைப்படமும் எடுத்திருக்கலாம்.

இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தன.
சீனா விளக்கம்: இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் பெய்ஜிங்கில் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
இந்திய - சீன எல்லைப் பகுதியையொட்டிய கிழக்குப் பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை நிலவி வருகிறது.
இந்தப் பகுதியில் சீன ராணுவம் ரோந்துப் பணியில் ஈடுபடுவது வழக்கமான நடைமுறை தான்.
இந்நிலையில், எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவுவதற்கு இரு நாடுகளும் இணைந்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் ஹுவா சுன்யிங்.
கடந்த மார்ச் முதல், சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது இது 4-ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments