இளைய சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன் - பட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு

இளைய சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன் - பட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு

தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி, ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’.
அறிமுக இயக்குநர் ஆர்.இன்பசேகரன் இயக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுதுகிறார். சில்வர் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் சார்பில் சிவரமேஷ்குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டார். மேலும் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், பிரபு சாலமன், பேரரசு, அறிவழகன், சூராஜ், ஐக், நடிகர் பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.
விஜய் நடித்த ‘புலி’ படத்தை தயாரித்த பி.டி.செல்வகுமார் இப்படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களை வரவேற்ற பி.டி.செல்வகுமார், சிவார்கார்த்திகேயனுக்கு இளைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்தார். அவர் இளைய சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன், என்று சொல்லும் போது, அதிர்ச்சியடைந்த சிவகார்த்திகேயன் முகத்தை திருப்பிக் கொண்டார். பிறகு சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராக பேசிய போதும், சிவகார்த்திகேயனின் பட்டப்பெயர் குறித்து பேசினார்கள்.
இறுதியாக பேசிய சிவகார்த்திகேயன், ”பி.டி.செல்வகுமார் சொன்ன பட்டப்பெயரை என் வாயால் கூட நான் சொல்ல மாட்டேன். நமக்கெல்லாம் எந்த பட்டப்பெயரும் தேவையில்லை. இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் உமாபதி, அவரது அப்பா தம்பி ராமையா சாரைப் பின்பற்றினாலே போதும் வெற்றிபெற்றுவிடுவார். நன்றாக நடனம் ஆடுகிறார். எனது நடமும் அவருக்கு பிடிக்கும் என்று சொன்னதற்கு நன்றி.” என்றார்.

Comments