காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் பதிலடி 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை
நவ்ஷேரா: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் அந்நாட்டு வீரர்கள் 5 பேர் பலியாகிவிட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இதுபோன்று, இந்திய நிலைகள் மீது தாக்குதல்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.
இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ரஜோரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது இந்திய வீரர்கள் சார்பில் பதிலடிக் கொடுக்கப்பட்டது. எனினும் இந்த தாக்குதலில் மத்திய பொறியியல் படைப் பணியாளர் ஒருவர் உயிரழந்தார், 2 பேர் படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து நவ்ஷேராவில் பிம்பெர் மற்றும் பட்டால் செக்டாரில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தானை சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
மேலும் 6 பேர் காயமடைந்து உள்ளனர். இதனிடையே இந்த தாக்குதல் குறித்து காஷ்மீர் எல்லையில் பணியில் உள்ள 7 தளபதிகளுடன் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஆலோசனை மேற்கொண்டார். எல்லையில் ராணுவ வீரர்கள் போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் கொண்டுசெல்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. எல்லை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இந்திய துணை தூதர் ஜெ.பி.சிங்குக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
Comments
Post a Comment