மும்பை தாராவியின் பின்னணியில் ரஜினியின் காலா பர்ஸ்ட் லுக் வெளியானது

மும்பை தாராவியின் பின்னணியில் ரஜினியின் காலா பர்ஸ்ட் லுக் வெளியானது

ரஜினியின் புதிய படமான காலா-வின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் காலா. ரஜினியின் 164வது படமாக உருவாக உள்ள இப்படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் தலைப்பை காலை 10 மணியளவில் வெளியிட்டார் தனுஷ். காலா என்ற பெயர் அறிவிப்பு வெளியானதில் இருந்து டுவிட்டரில் காலா தான் டிரெண்ட்டிங்கில் இருந்தது.
கரிகாலன் என்ற பெயரின் சுருக்கமே காலா, ரஜினிக்கு பிடித்த பெயர் என்பதால் காலா என வைக்கப்பட்டுள்ளது என இயக்குநர் ரஞ்சித் கூறி உள்ளார். மேலும் இது நெல்லை மக்கள் வணங்கும் கடவுளின் பெயர் என்றும் ரஞ்சித் கூறினார். ஆனாலும் காலாவிற்கு சமஸ்கிருதத்தில் கருப்பு என்ற அர்த்தம் உள்ளது, இது நிற அரசியலை பற்றி பேசப்போகும் படம் என பல்வேறு விதமான யூகங்கள் போய் கொண்டுள்ளன. மேலும் காலா என்றால் என்ன என்று சமூக வலைதளங்களில் பெரிய விவாதமே போய் கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில் காலையில் காலா - கரிகாலன் தலைப்பை அறிவித்த தனுஷ், மாலை 6 மணியளவில் காலா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இரண்டு விதமான போஸ்டரை தனுஷ் வெளியிட்டார். அதில் ஒரு போஸ்டரில் மும்பை தாராவின் பின்னணியில் ரஜினி ஜீப்பில், கருப்பு சட்டை, காவி டைப்பிலான வேஷ்டி கருப்பு கண்ணாடி அணிந்து கால் மேல் கால் போட்டபடி ஜீப்பில் அமர்ந்திருக்கிறார். மற்றொரு போஸ்டரில் ரஜினி கோபமாக முகத்தில் ரத்த கறையுடன் காட்சியளிக்கிறார். இந்த போஸ்டரின் மூலம் காலா மும்பை, தாராவியை பின்னணியாக கொண்ட கதை தான் என்பது உறுதியாகியிருக்கிறது.
மும்பை தாராவி பின்னணியில் நடக்கும் கதை இது என்பதால் முதற்கட்ட படப்பிடிப்பு வருகிற 28-ம் தேதி முதல் மும்பையில் ஆரம்பமாக உள்ளது. தொடர்ந்து மும்பையில் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க உள்ளனர். பின்னர், சென்னையின் புறநகரான பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் போடப்பட்டுள்ள தாராவி குடிசை செட்டில் படமாக்குகிறார்கள். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் காலா படம் வெளியாகிறது

Comments