காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் அழிப்பு இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்
காஷ்மீரில் அவ்வப்போது பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் உள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து காஷ்மீர் மாநிலத்துக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ வசதியாக இந்திய ராணுவ நிலைகள் மற்றும் எல்லையோர கிராம மக்களின் வசிப்பிடங்கள் மீது துப்பாக்கி சூடு, பீரங்கி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாக கொண்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைந்து அமைதியை சீர்குலைக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த 1–ந்தேதி இந்திய ராணுவ வீரர்கள் இருவரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றதுடன், அவர்களின் தலையை துண்டித்தும், உடலை சிதைத்தும் தனது குரூர புத்தியை வெளிப்படுத்தியது. இதற்கு தக்க நேரத்தில் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் கூறி இருந்தனர்.
அதிரடி தாக்குதல்
தொடர்ந்து பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யும் அடாவடி செயலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க ராணுவ அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இந்த நிலையில், கோடை வெயில் காரணமாக காஷ்மீர் பனிப்பிரதேச பகுதிகளில் தற்போது பனி உருகி ஓடுகிறது. இதை பயன்படுத்தி காஷ்மீருக்குள் ஊடுருவ நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் எல்லையில் தயாராக இருக்கின்றனர்.
இதை தடுப்பதற்காக ரஜோரி மாவட்டம், நவ்ஷெரா செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே இருந்த பாகிஸ்தான் ராணுவ முகாம்கள், நிலைகள் மீது அதிரடி தாக்குதலை சமீபத்தில் இந்திய ராணுவம் நடத்தியது.
வீடியோ வெளியீடு
இந்த தாக்குதல் தொடர்பான 22 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோ காட்சிகளை டெல்லியில் ராணுவ அதிகாரிகள் நேற்று செய்தியாளர்கள் முன்பாக வெளியிட்டனர்.
அந்த வீடியோவில், பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் இருந்த பகுதிகளில் பலத்த வெடிச்சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. அந்த பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் கரும்புகை மண்டலம் சூழ்ந்த காட்சியும் தெரிந்தது. பாகிஸ்தான் ராணுவ முகாம்கள், ராணுவ நிலைகள் பல இதில் முற்றிலுமாக நாசமானதை பார்க்க முடிந்தது.
பின்னர் இந்த தாக்குதல் பற்றி ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:–
பீரங்கி ஏவுகணை வீச்சு
பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக பாகிஸ்தான் தொடர்ந்து உதவி வருகிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறது. இதனால் பயங்கரவாதிகள் எல்லைகட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஆயுதங்களை குவிக்கின்றனர்.
சில நேரங்களில் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வதற்காக எல்லையோர கிராமங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர் துப்பாக்கி சூடும் நடத்துகிறது. இதனால் எல்லையில் பயங்கரவாதிகள் சாதகமான நிலையை அடைந்து விடக்கூடாது. இதை தடுக்கும் நோக்கத்துடன் நமது ராணுவம் இந்த தாக்குதலை மேற்கொண்டது.
ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கி ஏவுகணைகள், தானியங்கி கையெறி குண்டு லாஞ்சர்கள் மற்றும் நவீன ரக துப்பாக்கிகள் ஆகியவற்றின் மூலம் தாக்குதல் தொடுக்கப்பட்டது. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
ராணுவ முகாம்கள் அழிப்பு
இதில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியையொட்டி இருந்த பாகிஸ்தான் ராணுவ முகாம்கள், ராணுவ நிலைகள், கட்டிடங்கள் பல முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
எனினும், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு அப்பால் பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தியது தொடர்பான முழுமையான தகவல்களை ராணுவ அதிகாரிகள் வெளியிடவில்லை. இந்திய ராணுவ வீரர்கள் தலைதுண்டித்து கொல்லப்பட்ட 9 நாட்கள் கழித்து, அதாவது கடந்த 9–ந்தேதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29–ந்தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் வெகுதூரம் ஊடுருவி பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நடத்தப்பட்ட ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடவடிக்கைக்கு இணையாக இந்த தாக்குதல் கூறப்படுகிறது.
தேவையான நடவடிக்கை
இதுபற்றி ராணுவம் மற்றும் நிதி மந்திரி அருண்ஜெட்லி தனது டுவிட்டர் பதிவில், ‘‘எல்லை கட்டுப்பாட்டு கோடுக்கு அப்பால் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை மத்திய அரசு ஆதரிக்கிறது. காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. முன்னெச்சரிக்கை மற்றும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது’’ என்று குறிப்பிட்டார்
Comments
Post a Comment