இந்திய நிறுவனங்களை தவிர்க்கும் எந்த நாடும் இங்கு முதலீடு செய்ய முடியாது'
இந்திய நிறுவனங்கள் வர்த்தகம் புரிய தடையாக உள்ள நாடுகளுக்கு, இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதி கிடையாது,'' என, மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.சீனாவைச் சேர்ந்த, மின் நிறுவனங்களின் முதலீடுகளுக்கு தடை விதிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், அமைச்சரின் பேச்சு, மின் துறையில் சீனாவின் யதேச்சதிகாரத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக கருதப்படுகிறது. சீனா, பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, மின் முனையம் மற்றும் மின் வினியோக திட்டங்களில், அன்னிய முதலீட்டை அனுமதிக்க மறுத்து வருகிறது. இந்தியா, இதே திட்டங்களுக்கு, 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதனால், இத்திட்டங்களில், சீன நிறுவனங்கள் பங்கேற்று வருகின்றன.இது குறித்து, டில்லியில், மின் நுகர்வோர்களுக்கான, 'சேவா' என்ற மொபைல், 'ஆப்' வெளியீட்டு விழாவில், பியுஷ் கோயல் பேசியதாவது: இந்திய மின் துறையில், அன்னிய நிறுவனங்கள் தாராளமாக முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அது போல, இந்திய நிறுவனங்களும், அயல்நாடுகளில் வர்த்தகம் புரிய அனுமதி அளிக்க வேண்டும். பொதுத் துறையில், பவர் கிரிட் போன்ற, மின் வினியோக நிறுவனங்கள் எந்த நாட்டிலும் முதலீடு செய்யவோ அல்லது மின் வினியோக திட்டங்களை மேற்கொள்ளவோ முடியாது என்றால், அந்த நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும், இந்தியாவில் அது போன்ற முதலீடுகளையோ, திட்டங்களையோ மேற்கொள்ள அனுமதிக்க மாட்டோம். இந்தியா, பரஸ்பர வர்த்தகத்தையே விரும்புகிறது. குறிப்பிட்ட நாட்டின் முதலீட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம், இந்தியாவிற்கு கிடையாது.
Comments
Post a Comment