ஜூன் 1ம் தேதி முதல் ஆதார் இருந்தால் மட்டுமே மானிய விலையில் உரம் கலெக்டர் தகவல்
ஆதார் அட்டை வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே, ஜூன் 1 முதல், மானிய விலையில் உரங்கள் கிடைக்கும் என திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் 154 தனியார் உர விற்பனை நிலையங்கள், 123 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உரங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதில், முறைகேடுகளை தடுக்க, மானிய உரம் வழங்க, ஆதார் அட்டையை கட்டாயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, ஆதார் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் உரங்களை வழங்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, கையடக்க எலக்ட்ரானிக் கருவிகளை கலெக்டர் சுந்தரவல்லி உர விற்பனையாளர்களுக்கு நேற்று வழங்கினார். தொடர்ந்து அவர் கூறுகையில், ‘’இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் மானியம் போக மீதி தொகையை செலுத்தி உரம் பெற்றுக் கொள்ளலாம். மேலும், உர விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளையும், மற்ற துறைகளுக்கு உரங்கள் விநியோகம் செய்யப்படுவதையும் தடுக்கலாம். எனவே, விவசாயிகள் ஜூன் 1ம் தேதிக்குள் தங்கள் ஆதார் எண்களை பதிவு செய்து நேரடி உர மானியம் பெற்று பயனடையலாம் என்றார். இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் ஜோ குமார் பிரைட், துணை இயக்குனர் தேவேந்திர பரிக்கார், தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் எபினேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment